கடலோர தமிழகத்தில் மீண்டும் துவங்கியது பருவ மழை

கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி துவங்கிய வடகிழக்கு பருவ மழை டெல்டா மாவட்டங்கள் முதல் வட கடலோர பகுதிகள் வரை பரவலாக நல்ல மழை கொடுத்துள்ளது.  இந்நிலையில் கடந்த வார இறுதி முதல் சற்றே தொய்வு அடைந்திருந்த மழை நேற்று முதல் கடலோர பகுதிகளில் மீண்டும் துவங்கியது.  இலங்கை அருகே நீடித்து வரும் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி காரணமாக புதுவை முதல் டெல்டா மாவட்ட பகுதிகள் வரை பரவலாக மழை பெய்தது.

அதிகபட்சமாக நாகப்பட்டினம் இந்திய வானிலை துறை மையத்தில் 8 செ.மீ அளவிற்கு மழை பதிவானது.  வடகிழக்கு பருவ மழை காலம் துவங்கியது முதல் இன்று வரை கிட்டத்தட்ட 86 செ.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது, மேலும் 1 செ.மீ மழை பதிவானால் ஆண்டிற்கான சராசரி அளவை எட்டி விடும்.  இதே போல் காரைக்கால் மற்றும் கடலூர் இந்திய வானிலை துறை மையங்கள் மேலும் 7 செ.மீ மழை பதிவானால் ஆண்டிற்கான சராசரியை எட்டி விடும்.

இலங்கை அருகே நீடித்து வரும் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலோர பகுதிகளில் இன்றும் கீழ் நிலை காற்று குவிதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  நேற்று புதுவை / டெல்டா பகுதிகளில் ஏற்பட்ட குவிதல் பகுதி இன்று சற்றே வடக்காக இருக்கக்கூடும்.  இதன் காரணமாக சென்னை போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் முன்னிரவு / அதிகாலை பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

பகல் நேரத்தில் மழையில் சற்று தொய்வு இருந்தாலும் கடலோர பகுதிகளில் மாலை / இரவு நேரத்தில் மழை மீண்டும் துவங்க ஏதுவான சூழல் உள்ளது. உட்புற பகுதிகளில் தற்போதைய நிலையில் மழை ஏற்பட வாய்ப்பு சற்று குறைவே.  இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி சற்று வலுப்பெற்று மேற்காக நகர்ந்தால் உட்புற பகுதிகளிற்கு வாய்ப்பு அதிகரிக்கும்.