உட்புற பகுதிகளை ஏமாற்றி வரும் பருவ மழையால் தாளடி பட்டம் பாதிப்பு??

வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் துவங்கியது முதல் கடலோர பகுதிகளில் பரவலாக மழையை கொடுத்துள்ளது நாம் அனைவரும் அறிந்ததே.  குறிப்பாக கடற்கரைக்கு அருகே பல சமயம் பலத்த மழை பெய்து வரும் வேளையில் கரைக்கு சற்றே உட்புற பகுதிகளில் முற்றிலுமாக மழையே இல்லாத நிலையையும் நாம் பார்த்துள்ளோம்.  இந்த ஆண்டின் பருவ மழை முழுவதும் இத்தகைய நிலையே நீடித்துள்ளது.

இரண்டு குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாகிய போதும் இரண்டுமே தமிழகத்தில் பரவலாக மழை ஏற்பட ஏதுவான சூழல் உருவாக்கவில்லை.  இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை உட்புற பகுதிகளில் பரவலாக இயல்பிற்கு அதிகமாக மழையை கொடுத்துள்ள போதிலும் உட்புற பகுதிகளில் பரவலாக புரட்டாசி / ஐப்பசி  மாதங்களில் துவங்கும் தாளடி பட்ட நெல் நடவுக்கு வடகிழக்கு பருவ மழை ஓர் முக்கிய காரணியாகும். தற்போது வரை உட்புற பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை பெய்துள்ளது என கூற வேண்டும்.  இதன் காரணமாக தாளடி பட்ட சாகுபடி பாதிக்ககூடிய சூழல் தற்போது உருவாகி உள்ளது.  பரவலாக பலத்த மழை பெய்யாத போதிலும் அவ்வபோது ஏற்படும் சாரல் / மிதமான மழை உட்புற பகுதிகளில் பயிர்கள் வளர ஓர் ஏதுவான சூழல் வடகிழக்கு பருவமழை ஏற்படுத்தும்.

வானிலை படிவங்கள் மார்கழி மாதப்பிறப்பு வரை மழை இருக்கக்கூடும் என கணிக்கின்றன, இனி வரும் நாட்களில் ஏற்படும் சலனம் தமிழகத்தில் பரவலாக மழை ஏற்பட ஏதுவான சூழலை ஏற்படுத்தக்கூடும் என்பதே எமது நம்பிக்கை.