தென்மேற்கு பருவ மழை தீவிரம் – நிரம்பும் அணைகள்

தென்மேற்கு பருவமழையை பொறுத்த வரை தமிழகம் ஓர் மழை மறைவு பகுதி என்பது எல்லோரும் அறிந்தது.  எனினும் மேற்கு தொடர்ச்சியை ஒட்டிய பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் இந்த காலத்தில் நல்ல மழை பொழிவு இருக்கும்.  குறிப்பாக வால்பாறை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பல இடங்களில் கணமழை பெய்வதற்கான வாய்புகள் அதிகம்.

மேலும் தமிழகத்தின் பெரும்பாலான அணைகளுக்கு நீர் பிடிப்பு பகுதிகள் தென்மேற்கு பருவமழையை நம்பியே உள்ளது.  இதே போல் காவேரி நீர் பிடிப்பு பகுதிகள் முழுவதுமே தென்மேற்கு பருவமழையை நம்பி உள்ளது.  இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளக்கரையை வழக்கத்தை விட இரு தினங்களுக்கு முன் தொட்டது என்ற போதிலும் பருவ மழை தீவிரம் அடைந்தால் மட்டுமே அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கும்.

கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது.  தற்போது சென்னை போன்ற பகுதிகளில் நீடித்து வரும் பலமான மேலைக்காற்றே தீவிரம் அடைந்துள்ள பருவ மழையின் அறிகுறி.  இந்த பலத்த மேலைக்காற்றின் காரணமாக தமிழகத்தின் உட்புற பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக ஏற்படக்கூடிய இடிமேகங்கள் உருவாக ஏதுவான சூழல் இல்லாமல் போகிறது.

திருநெல்வேலி, கோவை மாவட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான அணைகளில் கடந்த இரு தினங்களாக நீர் வரத்து நன்கு அதிகரித்துள்ளது.  இதேபோல் இன்றைய நிலைப்படி கர்நாடக மாநிலத்தில் உள்ள காவேரி நீர் பிடிப்பு அணைகளில் ஒரே நாளில் 5 டி.எம்.சி அளவிற்கு நீர் கொள்ளளவு அதிகரித்து உள்ளது.