கத்திரியுடன் முடிவடைகிறதா சென்னையில் கோடைக்காலம்

சென்னையில் கோடைகாலம் என்பது பரவலாக கத்திரியை அல்லது அக்னி நக்ஷத்திர காலத்தை ஒட்டியே இருக்கும் என்பது பலரின் கூற்று.  இது உண்மையா, கத்திரி காலத்திற்கு பிறகு சென்னையில் வெப்பம் குறைந்து விடுகிறதா என்பதை இன்றைய பதிவின் மூலம் நாம் பார்க்க போகிறோம்.

சென்னை போன்ற கடலோர பகுதிகளில் பொதுவாக கோடைகாலத்தில் கடற்காற்று மூலமாகவே மாலை நேரங்களில் வெப்ப நிலை குறையக்கூடும்.  இதே போல் இடி மேகங்கள் / மழை இருந்தால் வெப்ப நிலை குறையக்கூடும்.  மே மாதம் கடைசி வாரம் முதல் பெரும்பாலும் மேலைக்காற்று வலுபெற ஆரம்பித்துவிடும்.  தென்மேற்கு பருவ காலங்களில் மேலைக்காற்று நன்கு பலம் அடைந்து விடுவதால் பெரும்பாலும் சென்னைக்கு கிழக்கில் இருந்து வரும் கடற்காற்று குறைந்து விடும்.  இதனால் ஜூன் மாதங்களில் மாலை நேரத்தில் சென்னை போன்ற கிழக்கு கடலோர பகுதிகளில்  வெப்ப நிலை பரவலாக உயர்ந்து காணப்படும். குறிப்பாக  சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களை நாம் பார்த்தோம் எனில் ஜூன் மாதமே அதிகபட்ச வெப்ப நிலையை எதிர்கொள்ளும்.

கடந்த 25 ஆண்டுக்கான சராசரி அதிகபட்ச வெப்ப நிலையை நாம் பார்த்தோமெனில் மே மதமே பரவலாக அதிக வெப்பத்தை பார்த்துள்ளது எனினும் பல ஆண்டுகளில் ஜூன் மாதங்களிலும் மே மாதத்திற்கு ஒட்டிய அளவிற்கு வெப்பம் பதிவாகி உள்ளது.  1980 -2017 இடைப்பட்ட காலத்தில் 11 ஆண்டுகளில் ஜூன் மாதங்களில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை மே மற்றும் ஜூன் மாதமே சராசரியாக அதிக வெப்பத்தை சந்திக்கும் மாதங்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை ஆனால் அதே கண்ணோட்டத்தில் சென்னையை பொறுத்தவரை கோடைக்காலம் கத்திரி முடிந்தவுடன் முடிவதில்லை.