வெப்ப சலன மழை – ஓர் அலசல்

அடுத்த ஒரு சில மாதங்களுக்கு சென்னை வானிலை மைய அறிவிப்புகளில் நாம் பல முறை கேட்கக்கூடிய வாசகம் “தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” இந்த வெப்ப சலனம் எப்படி உருவாகிறது என பல சமயம் கேள்வி எழுவதுண்டு இந்த பதிவின் மூலம் இந்த கேள்விக்கு எங்களால் இயன்ற வரை பதில் தர முயன்றுள்ளோம்.

பரவலாக தமிழகத்தின் உட்புற பகுதிகளில் வெப்ப சலன மழை தென்மேற்கு பருவ மழை காலத்தில் தொய்வு நிலையில் இருக்கும் பொது அதிகரிக்கிறது, தற்போது தென்மேற்கு பருவ மழையில் சற்று தொய்வான நிலை இருக்கக்கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  நேற்று தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை சற்று குறைந்து காணப்பட்டது. இதே போல் மேற்கு கடலோர பகுதிகளிலும் மழை குறைந்து விட்டது.

வெப்ப சலன மழை என பரவலாக கூறப்பட்டாலும் இத்தகைய இடி மேகங்கள் உருவாவதை நாம் காற்று சலனம் எனவும் கூறலாம்.  வெப்பம், காற்று மட்டுமல்லாமல் கிழக்கு தொடர்ச்சி மலையும் இந்த வெப்ப சலன மழை ஏற்பட முக்கிய காரணிகள்.  இந்த மூன்று காரணிகளும் தங்களிடையே விளையாடும் விளையாட்டே இடிமேகங்கள் உருவாக ஏதுவான சூழலை சலனத்தின் மூலம் ஏற்படுத்துகிறது.

தென்மேற்கு பருவ மழை தொய்வு அடையும் பொது மேலைக்காற்றின் வேகம் குறைந்து விடுகிறது.  மேற்கில் இருந்து கிழக்கு திசையில் வரும் காற்றில் இருக்கும் ஓரளவு ஈரப்பதம் பகல் நேர வெப்பத்தின் காரணமாக மேல் எழும்போது மேலும் அதிகரிக்கிறது. இதே போல் கிழக்கு தொடர்ச்சி மலை காரணமாகவும் மேல் எழும்போதும் ஈரப்பதம் அதிகரித்து இடி மேகங்கள் உருவாகக்கூடிய சூழலை ஏற்படுத்துகிறது.

இதே போல் கிழக்கு திசையில் இருந்து ஈரப்பதத்துடன் வரும் கடற்காற்றும் சலனம் ஏற்படுத்துகிறது.  மேல் அடுக்கு காற்றும் தரை அளவு காற்றும் வலது கோணத்தில் சந்திக்கும் போது காற்று வகைக்கெழு (Wind Shear) ஏற்பட்டு மழை மேகங்கள் வலுபெற ஏதுவான சூழலை ஏற்படுத்தி கண மழை பெய்யும் வாய்ப்பு ஏற்படுகிறது.