மீண்டும் வலுப்பெறும் தென்மேற்கு பருவமழை

கடந்த சில நாட்களாக சற்று தொய்வு நிலையில் நீடித்து வரும் தென்மேற்கு பருவமழை மீண்டும் வலுப்பெற ஏதுவான சூழல் உருவாகி வருகிறது. தமிழகத்தின் உள்ள கிட்டத்தட்ட அணைத்து அணைகளின் நீர் ஆதார பகுதிகள் தென்மேற்கு பருவமழை அதிகம் பொழியும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது.  இதன் காரணமாகவே இந்த மாதத்தின் முதற் பகுதியில் ஏற்பட்ட நல்ல மழையின் காரணமாக திருநெல்வேலி / நீலகிரி போன்ற மாவட்டங்களில் உள்ள பல அணைகள் கிட்டத்தட்ட முழு கொள்ளளவு நிலை வரை எட்டி உள்ளது.

காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட நல்ல மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் நல்ல நீர் வரத்து பெற்று தற்போது கபினி அணை முழு கொள்ளளவிற்கு இரண்டு அடியே குறைவாக உள்ளது.  இந்நிலையில் சில நாட்கள் தொய்விற்கு பின் மீண்டும் பருவ மழை பலம் அடையக்கூடும் என வானிலை படிவங்கள் எதிர்பார்கின்றன.  குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கர்நாடகா / கேரளா மற்றும் நீலகிரி மாவட்ட பகுதிகளில் வரும் ஓரிரு வாரங்களுக்கு நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

வெப்ப மண்டல பகுதிகளில் பருவ மழை தீவிரம் அடைய மற்றும் புயல் உருவாக / வலுப்பெற மேடன் ஜூலியன் அலைவு (MJO) ஓர் முக்கிய காரணியாகும்.  பூமத்திய ரேகையை ஒட்டி மேற்கில் இருந்து கிழக்காக நகரும் இந்த அலைவு 30 முதல் 60 நாட்களுக்கு ஒரு முறை பூமியை சுற்றி வருகிறது.  இந்த அலைவின் முற்பகுதி அதிக மழையையும் பிற்பகுதி வறண்ட வானிலையையும் கொடுக்கும்.  2015 ஆம் ஆண்டு அதிகம் பெய்த வடகிழக்கு பருவ மழையின் போது சாதகமாக இருந்த இந்த MJO 2016ஆம் ஆண்டு சாதகமற்ற நிலையில் இருந்ததால் பருவமழை பொய்த்து விட ஓர் முக்கிய காரணமாகும்.

வரும் நாட்களில் இந்த MJO மீண்டும் வட இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதிகளில் தனது இயக்க விளைவை உருவாகக்கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன இதன் காரணமாக சற்று தொய்வு நிலையில் உள்ள தென்மேற்கு பருவமழை மீண்டும் வலுப்பெற ஏதுவான சூழல் உருவாகிவருகிறது.  இதேபோல் அடுத்த வாரத்தில் வங்கக்கடல் பகுதியில் ஓர் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாகி பருவமழைக்கு மேலும் மெருகு எட்டக்கூடும்.

அடுத்த ஓரிரு வாரங்களுக்கு கர்நாடகா மற்றும் கேரளாவில் பருவ மழை இயல்பிற்கு அதிகமாகவே இருக்ககூடும். இதன் காரணமாக காவேரி போன்ற ஆறுகளில் மீண்டும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.  இந்த ஆண்டு காவேரி ஆற்றில் உள்ள அணைகள் அனைத்துமே நல்ல நீர் இருப்பை நோக்கி செல்லக்கூடும் என நினைக்கும் பொது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.