தென்மேற்கு பருவ மழை வட கொங்கன் பகுதியில் தீவிரம்

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளா கரையை இயல்பிற்கு இரு தினங்கள் முன்பாகவே அடைந்தது அனைவரும் அறிந்ததே.  மும்பையை தென்மேற்கு பருவ மழை சராசரியாக ஜூன் 10ஆம் தேதி அடையும்.  இந்த ஆண்டு ஜூன் 9 அன்று தென்மேற்கு பருவமழை மும்பை கரையை அடைந்தது.  அதற்கு பிறகு பருவமழையில் தொய்வு அடைந்து விட்டது.  பருவமழை துவங்கியது பின் முதல் நாள் மட்டுமே நல்ல மழை பெய்த நிலையில் நேற்று முதல் பருவ மழை மும்பை மற்றும் அதனை சார்ந்த வட கொங்கன் கரை பகுதிகளில் தீவிரம் அடைந்துள்ளது.

நேற்று மும்பை மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பல இடங்களில் மிக பலத்த மழை பெய்துள்ளது.  இன்றும் பல இடங்களில் கண மழை தொடர்ந்து வருகிறது. குஜராத்தில் நீடித்து வரும் மேல் அடுக்கு காற்று சுழற்சி காரணமாக இந்த பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் அடுத்த ஓரிரு நாட்களில் பருவ மழை குஜராத், மத்திய பிரதேசம் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் பல இடங்களை அடைந்து விடும் என இந்திய வானிலை மையம் எதிர்பார்க்கிறது.

தென் இந்திய தீபகற்ப பகுதியை பொறுத்தவரை மகாராஷ்டிரா கரை அளவிற்கு மழை இல்லை என்ற போதிலும் கர்நாடக மற்றும் கேரள பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.  இதன் காரணமாகவே தமிழகத்தின் வட கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்னும் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.  சென்னையின் மைய பகுதிகளில் மழை இல்லாத போதிலும் மேற்கு / வடமேற்கு புறநகர் பகுதிகளில் கடந்த இரு நாட்காளாக மழை பெய்துள்ளது.  இதேபோல் வரும் நாட்களில் வங்கக்கடலில் உருவாகக்கூடிய குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி கரையை அடைவதற்கு முன் சென்னை போன்ற வட கடலோர பகுதிகளில் ஓர் தினம் வெப்ப சலனம் காரணமாக மிதமான / கண மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.