தமிழகத்தில் அடுத்த ஓரிரு நாட்களில் வெப்ப சலன மழை வாய்ப்பு

இந்த ஆண்டின் தென்மேற்கு பருவ மழை இந்தியாவின் பெரும்பான்மையான இடங்களை அடைந்துள்ளது.  குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகளை தவிர ஏனைய அணைத்து மாநிலங்களிலும் முழுமையாக பருவ மழை இன்றைய நிலைப்படி அடைந்துள்ளது.  வழக்கமாக ஜூலை மாதம் 15தேதியை ஒட்டி தென்மேற்கு பருவ மழை வட மேற்கு கோடி பகுதியை அடைந்து நாட்டில் முழுமையாக படர்ந்து விடும்.  இந்த ஆண்டு இந்திய வானிலை துறையின் கணிப்புப்படி ஜூன் 30ஆம் தேதியை ஒட்டி முழுவதுமாக அடைந்து விடும்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பருவ மழை அடைந்துள்ள நிலையில் வடமேற்கு இந்திய பகுதிகளில் பல இடங்களில் பலத்த மழை பெய்துவருகிறது.  இன்றும் நாளையும் தொடரக்கூடிய பலத்த மழை சனி முதல் படிப்படியாக குறைந்து விடும்.  இதேபோல் கேரளா / கர்நாடகாவின் கடலோர பகுதிகளிலும் சில இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலை 8:30 வரையிலான 24 மணி நேரங்களில் ஆகும்பேவில் 30 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

நாம் பல முறை கூறியது போல் மேலைக்கரையோர பகுதிகளில் பருவ மழை பலமாக நீடித்து வந்தால் கீழை கரையோர பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக ஏற்படும் மழை வாய்ப்பு குறைவு. பலமான மேலைக்காற்று நீடிக்கும் பொது வளிமண்டலத்தில் ஓர் ஸ்திரமான நிலை நீடித்து வரும். இதன் காரணமாக இடி மேகங்கள் உருவாக வாய்ப்பு குறைந்து விடுகிறது.  மேலும் மேல் அடுக்கில் காற்றின் வேகம்  அதிகமாக நீடிக்கும் பொது மேகங்கள் மேல் எழும்ப ஏதுவற்ற சூழல் ஆகிவிடுகிறது.

அடுத்த ஓரிரு நாட்களில் பருவ மழையில் சற்று வீரியம் குறையக்கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  இதன் காரணமாக வெப்ப சலன மழை மீண்டும் ஏற்படக்கூடிய சூழல் தமிழகத்தில் உருவாகும்.  குறிப்பாக சென்னை போன்ற கடலோர பகுதிகளில் கடற்காற்றும் நன்கு எழும்பி அதனை சார்ந்த சலனம் மழை மேகங்களை உருவாக்கிவிடும்.  சனி / ஞாயிறுக்கு பிறகு பலமடையும் இந்த வாய்ப்பின் காரணமாக இந்த ஆண்டின் முதல் பரவலான வெப்ப சலனமழை அடுத்த வாரம் இருக்கக்கூடும்.