தென்மேற்கு பருவமழை மீண்டும் வலுப்பெற ஏதுவான சூழல்

கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவ மழை ஓர் தொய்வு நிலையில் நீடித்து வருகிறது. மேலை கரையோர பகுதிகளில் பரவலாக வழக்கத்திற்கும் குறைவாகவே மழை பெய்து வருகிறது.  இதே போல் பருவக்காற்று அகடு (monsoon trough) இமயமலையை ஒட்டிய பகுதிகளில் இருந்து வருவதால் அப்பகுதியில் பலத்த மழை பெய்து வந்தது.

கடலோர மற்றும் உட்புற தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக ஏற்படும் மழை தென்மேற்கு பருவ மழை தொய்வு காலங்களிலேயே அதிகரிக்கும்.  இரு தினங்களுக்கு முன் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது அதே போல் அன்று சமயபுரம் பகுதியில் 17 செ.மீ. மழை பதிவாகியது. அதற்கு முன் சேலத்தில் 13 செ.மீ மழை பெய்து பல இடங்களில் வெள்ளம் ஏற்படும் நிலை உருவானது.

ஓடிசாவை ஒட்டிய பகுதிகளில் உருவாகி வரும் மேலடுக்கு காற்று சுழற்சி அடுத்த ஓரிரு தினங்களில் பருவக்காற்று அகடு இமயமலை ஒட்டிய பகுதிகளில் இருந்து கீழ் இறங்க ஏதுவான சூழலை ஏற்படுத்தும்.  இதே போல் இந்த மேலடுக்கு சுழற்சியானது அரபிக்கடல் பகுதியில் காற்றின் ஈர்ப்பையும் அதிகரித்து பருவமழை மீண்டும் வலுப்பெற ஓர் முக்கிய காரணியாக இருக்கும். தென்மேற்கு பருவமழை காலத்தில் பூமத்திய ரேகையை தாண்டி வரும் பருவக்காற்று பலமாக இருக்கும் காலத்தில் பருவமழை பலமாக நீடிக்கும்.  ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் அடிக்கடி ஏற்படும் Monsoon Depression காரணமாக பருவக்காற்று பலமடைந்த நிலையில் நீடித்து பரவலாக பலத்த மழை ஏற்பட வழி வகுக்கிறது

கொங்கன் கரையோர பகுதிகளில் இன்று நாளை பரவலாக நல்ல மழையை எதிர்பார்க்கலாம், வெள்ளி இரவு முதல் கேரளா மற்றும் கர்நாடகா பகுதிகளிலும் பருவமழை மீண்டும் வலுப்பெறும். தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள அணைகளில் வரும் வாரத்தில் நீர் வரத்து மீண்டும் அதிகரிக்க துவங்கி விடும்.  இதேபோல் தென் தமிழகத்தில் கண்னியாயகுமரி மாவட்டத்தில் இந்த வார இறுதி முதல் மீண்டும் பரவலாக நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

பருவ மழை பலம் பெற்றால் வெப்ப சலன மழை ஓய்ந்து விடும்.  அடுத்த 10 நாட்களுக்கான மொத்த மழை வானிலை படிவ கணிப்பை பார்த்தோமெனில் கடலோர மற்றும் உட்புற தமிழகத்தில் பரவலாக வறண்ட வானிலை காணப்படுகிறது.  முற்றிலுமாக மழை நின்றுவிடும் என கூற இயலாது எனினும் பரவலாக இடி மேகங்கள் உருவாக வாய்ப்பு குறைந்து விடும்