காவேரி வடிநில அணைகள் நீர் இருப்பு அதிகரிக்க ஓர் வாய்ப்பு

கடந்த சில ஆண்டுகளாக காவேரி வடிநில அணைகள் முழு கொள்ளளவை எட்டாமலும் பெரும்பாலும் வறட்சி நிலையே சந்தித்தும் வந்தன.  இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சற்று முன்னதாக துவங்கியது காவேரி வடிநில பகுதிகளை பொறுத்தவரை ஓர் வரப்ரசாதம் என கூறலாம்.  உச்ச நீதி மன்றம் மற்றும் ஊடகங்களில் பருவ மழை துவங்குவதற்கு முன் ஏற்பட்ட விவாதங்களிடையே பருவ மழை துவங்கியது பல கேள்விகளுக்கு பதிலை இயற்கை அன்னை தர உதவியது.

தற்போதைய நிலையில் காவேரி வடிநில பகுதியில் உள்ள அணைத்து முக்கிய அணைகளிலும் நீரின் இருப்பு நல்ல நிலையில் உள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது. கபினி அணை பல நாட்களாக முழு கொள்ளளவை ஒட்டி உள்ள நிலையில் ஹாரங்கி அணையும் முழு கொள்ளவை அடைய எட்டும் தூரத்தில் உள்ளது.  அணையின் பாதுகாப்பை கருதி நீர் வரத்து அனைத்துமே வெளியேற்ற துவங்கியுள்ளார்கள்.  இந்த நீர் வரும் நாட்களில் கிருஷ்ணராஜ சாகர் அணையை வந்தடையும்.

வானிலை படிவங்கள் அடுத்த ஓர் வாரம் / பத்து நாட்களுக்கு காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை இருக்ககூடும் என கணிக்கின்றன.  நமது முந்தைய பதிவில் நாம் தென்மேற்கு பருவ மழை மீண்டும் வலுப்பெறும் என எழுதி இருந்தோம்.  அதே போல் கடந்த ஓரிரு நாட்களாக கர்நாடகா மற்றும் கேரளாவின் வடக்கு பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.  வானிலை படிவங்களை நாம் நோக்கிநோமெனில் நீர் பிடிப்பு பகுதிகளில் பல இடங்களில் வரும் பத்து நாட்களில் 60 முதல் 80 செ.மீ அளவிற்கு மழை பதிவாக நல்ல வாய்ப்பு உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் மூன்றே முறை ஜூன் மாதத்தில் மேட்டூரில் நீர் வரத்து 10 டி.எம்.சி அளவை தாண்டி உள்ளது, 1999 2004 மற்றும் 2015, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஜூன் மாதம் கபினி அணையில் நீர் வரத்து நன்கு அமைந்த காரனத்தால் மேட்டூர் அணைக்கு 10 டி.எம்.சி. அளவை தாண்டி உள்ளது. காவேரி நடுவர் மன்றம் ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு 10 டி.எம்,சி. அளவை பரிந்துரை செய்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

எனினும்  ஜூன் மாதம் 12ஆம் நாள் மேட்டூர் அணை பாசனத்திற்கு திறக்காததை சிலர் சுட்டி காட்டக்கூடும். கடந்த சில ஆண்டுகளாக கர்நாடக மாநிலம் தனது நீர் இருப்பு கொள்கையில் ஓர் மாற்றம் கொண்டு வந்துள்ளது.  தென்மேற்கு பருவ மழை காலங்களில் அங்கு உள்ள அணைகளில் ஓரளவுக்கு நீர் இருப்பு அதிகரித்த பின் தமிழகத்திற்கு நீர் வழங்குவதை ஓர் வழக்கமாக கடைபிடித்து வரும் நிலையில் வரும் நாட்களில் எவ்வளவு ஆண்டுகள் மேட்டூர் அணை வழக்கமான ஜூன் 12ஆம் நாள் திறக்கப்படும் என்பது கேள்விக்குறியே.