வலுப்பெற்றது தென்மேற்கு பருவ மழை

வானிலை படிவங்கள் எதிர்பார்த்தபடி கடந்த ஓரிரு தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.  இரண்டு தினங்களாக மும்பை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.  இதே போல் தெற்கு கர்நாடகா மற்றும் வடக்கு கேரள பகுதிகளில் பெய்து வரும் நல்ல மழை காரணமாக காவேரி நீர் பிடிப்பு அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் இமையமலையை ஒட்டிய பகுதிகளில் நீடித்து வந்த பருவக்காற்று அகடு (Monsoon Trough) இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட குறைந்த காற்று தாழ்வு பகுதியின் உந்துதல் காரணமாக சற்றே பலம் பெற்று மத்திய இந்திய பகுதிக்கு கீழ் இறங்கி உள்ளது. இந்த நிகழ்வின் காரணமாக பருவமழையில் ஓர் வீரியம் ஏற்பட்டுள்ளது என கூறுவது மிகை ஆகாது.  தற்போது பருவக்காற்று அகடு தரை நிலையில் இருந்து 0.9 கிமீ அளவிற்கு உயர்ந்துள்ளது அதன் பலத்தை உணர்த்துகிறது.

வானிலை படிவங்கள் வரும் 4/5 நாட்களில் மற்றொரு குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடல் பகுதியில் உருவாகி அகடை ஒட்டியே நகரக்கூடும் என கணிக்கின்றன.  இதன் காரணமாக பருவமழை வரும் தீவிர நிலையில் அடுத்த ஓரிரு வாரங்களுக்கு நீடிக்க வாய்ப்பு உள்ளது.  மேற்கு கரையோர பகுதிகள் மற்றும் மத்திய இந்திய பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது என்ற வானிலை படிவங்களின் எதிர்பார்ப்பு மிகை அல்ல.  வயநாடு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் அடுத்த ஓரிரு நாட்களுக்கு நல்ல மழை நீடிக்கும் என்பதால் இந்த வாரத்தில் ஓரிரு நாட்களுக்கு கபினி அணையில் இருந்து வரும் நீர் வரத்து வினாடிக்கு 50000 கண அடி வரை எட்ட வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தை பொறுத்த வரை கோவை, நீலகிரி மாவட்டங்களில் பரவலாக வரும் 2/3 நாட்களுக்கு மழையை எதிர்பார்க்கலாம்.  ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும்.  இதே போல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம்.  தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரள பகுதிகளில் பருவ மழை ஏனைய இடம் போல் அல்லாமல் சற்று குறைந்தே காணப்படுகிறது.  எனினும்  கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தேனி ஆகிய மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை எதிர்பார்க்கலாம்.