முழு கொள்ளளவை நோக்கி மேட்டூர் அணை

தென்மேற்கு பருவ மழை கடந்த வாரம் முழுவதுமாக தீவிரமாக நீடித்து வருகிறது.  இதன் காரணமாக தெற்கு கரநாடகாவின் மலைநாடு பகுதிகளான குடகு, ஹாசன் மற்றும் வடக்கு கேரளாவின் வயநாடு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்துவந்தது.  இந்த மாதத்தின் கடந்த ஓர் வாரத்தில் கர்நாடகாவில் உள்ள காவேரி  அணைகளின் நீர் இருப்பு நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 டி.எம்.சி. அளவிற்கு உயர்ந்து நேற்று அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டியது.

கடந்த சில தினங்களாக கபினி அணைக்கு வரும் நீர் அனைத்தும் தமிழ்கத்திற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.  இந்நிலையில் நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையும் நிறைந்த நிலையில் அதிலிருந்து வினாடிக்கு 50000 கண அடிக்கும் அதிகமாக நீர் வெளியேற்றபடுகிறது.  மேட்டூர் அணையை பொறுத்த வரை கடந்த ஒரு வாரத்தில் அணையின் நீர் இருப்பு கிட்டதட்ட இரு மடங்கு உயர்ந்துள்ளது.  இன்றைய நிலைப்படி 45 டி.எம்.சி. அளவிற்கு நீர் உள்ளது. இது அணையின் முழு கொள்ளளவில் 50% ஆகும்.

கிருஷ்ணராஜா சாகர் அணையின் கீழ் மடை பகுதியில் உள்ள கொள்ளெகால் நீர் அளவீடு மையத்தில் போகும் ஆற்றின் நீர் உயரத்தை நாம் நோக்கினோமெனில் இன்று மதியம் முதலே  நீரின் அளவு அதிகரிக்க துவங்கி உள்ளது.  இது நாளை மேட்டூர் அணையை அடையக்கூடும்.  அடுத்த 2 / 3 நாட்களுக்கு வினாடிக்கு 75000 கண அடிக்கும் மேல் நீர் வரதை நாம் மேட்டுரில் எதிர்பார்க்கலாம்.  75000 குசெக்ஸ் நீர் வரத்து காரணமாக அணையில் நாள் ஒன்றுக்கு கிட்டதட்ட 7 டி.எம்.சி நீர் இருப்பு உயர வாய்ப்பு உள்ளது.  தற்போது இருக்கும் நிலையில் நாம் வரும் வாரத்தில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட அதிக வாய்ப்பு உள்ளது என கணிக்கலாம்