முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை

1934ஆம் ஆண்டு கட்டப்பட்ட மேட்டூர் அணை நேற்று வரை 38 முறை நிரம்பி வழிந்துள்ளது. இன்று 39-வது முறையாக முழு கொள்ளளவை மேட்டூர் எட்டியது தமிழகத்தின் அனைத்து விவசாய பெருங்குடி மக்களுக்கும் ஓர் மகிழ்வான நிகழ்வு. நமது போன வாரத்தின் பதிவில் கூறியது போல் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது.  2013ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4ஆம் தேதி நிரம்பி வழிந்த மேட்டூர் அணை அடுத்த சில ஆண்டுகளுக்கு 100 அடி அளவை எட்டவும் கடினமாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.  இந்த காலத்தில் தென்மேற்கு பருவமழை வயநாடு, குடகு போன்ற பகுதிகளில் சராசரியை விட குறைந்து இருந்ததே இந்த நிலைக்கு காரணம்.

கடந்த 20 ஆண்டுகளில் ஜூலை மாதத்தில் மேட்டூர் நிரம்புவது இது இரண்டாவது முறை ஆகும்.  2007ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி மேட்டூர் முழு கொள்ளளவை எட்டியது.  இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை முன்னமே துவங்கியது மட்டும் அல்லாமல் பரவலாக நீண்ட தொய்வு இல்லாமல் தற்போது வரை நீடித்து வருவது காவேரி வடிநில ஆணைகள் அனைத்துமே நிரம்ப ஏதுவான சூழலை ஏற்படுத்தியது.  கர்நாடக அணைகள் அனைத்தும் நிரம்பிய நிலையில் கடந்த இரு வாரங்களாக கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வந்த உபரி நீர் கிட்டதட்ட மூன்று தினங்களுக்கு 1 லட்சம் கன அடிக்கும் மேல் வந்தது மேட்டூர் அணை வேகமாக நிரம்ப வழி வகுத்தது.

1924ஆம் ஆண்டு காவேரி ஆற்றில் கிட்டதட்ட 4.5 லட்சம் கன அடி அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டது, காவேரி ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்ட ஆண்டுகளில் இது முக்கியமான ஆண்டாகும்.  1934ஆம் ஆண்டு மேட்டூர் அணை கட்டப்பட்ட பிறகு மிகு வெள்ளம் வெகுவாக குறைந்த போதிலும் 1977, 2005 ஆண்டுகளில் தென்மேற்கு பருவமழை விடைபெற்று வடகிழக்கு பருவமழை துவங்கக்கூடிய இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக  திருச்சி / ஸ்ரீரங்கம் போன்ற பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது என மறுக்க முடியாது.  2005ஆம் ஆண்டு கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேட்டூர் அணை முழு கொள்ளளவு நிலையில் இருந்தது அந்த ஆண்டு பெய்த மழைக்கு சாட்சி

காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மிதமான பருவ மழை காரணமாக அடுத்த சில நாட்களுக்கு வினாடிக்கு 50000 வரை நீர் வரத்து நீடிக்கக்கூடும். பருவமழை தொய்வு நிலை அடைய வாய்பு உள்ளதால் நீர் சேமிப்பு மிக முக்கியம்