தமிழகத்தில் சில இடங்களில் வெப்ப சலன மழை வாய்ப்பு

கடந்த பல நாட்களாக தென்மேற்கு பருவ மழை காலங்களில் தமிழகத்தின் உட்புற மற்றும் கடலோர பகுதிகளில் மழை தரக்கூடிய சலனம் இல்லாமல் இருந்து வந்தது. சில நாட்களாக மேலைக்கரை பகுதிகளில் பருவ மழையின் தொய்வு இருந்த வந்த போதிலும் தமிழகத்தில் பெரிதாக இடி மேகங்கள் ஏதும் உருவாகவில்லை. பல நாட்களுக்கு பிறகு நேற்று தமிழகத்தின் சில பகுதிகளில் வளிமண்டல சலனம் காரணமாக சற்றே பலத்த மழை பெய்தது.

குறிப்பாக கடலூர், சேலம், மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று மாலை நல்ல மழை பெய்தது. இதே போல் தென் தமிழகத்திலும் விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டத்தில் சில பகுதிகளில் மழை பெய்தது.  கன்னியாகுமரி மாவட்டதிலும் விடிய விடிய மழை சில இடங்களில் கொட்டி தீர்த்தது.

நேற்று நமது ஆங்கில பதிவில் கூறியது போல் மெதுவாக தமிழக வளிமண்டல பகுதிகளில் காற்று சலனம் ஏற்பட்டு வருகிறது கடந்த வாரத்தில் பரவலாக கடலோர பகுதிகளில் கீழை கடற்காற்றின் ஊடூருவல் காரணமாக ஆங்காங்கே மழை பெய்த போதிலும் இது பொதுவாக சாரல் மழை போலவே நீடித்து வந்தது. தற்போது காற்றில் சலனம் ஏற்படக்கூடிய சூழல் காரணமாக இடிமேகங்கள் வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக ஒரு சில இடங்களில் மழையின் வேகம் அதிகமாகவும் பலத்த இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றும் ஏற்படக்கூடும்.

இன்று வானிலை படிவங்கள் வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென் ஆந்திர பகுதிகளில் மேல் அடுக்கு வளிமண்டலத்தில் வெவ்வேறு எடையுடன் கூடிய காற்று குவிதல் ஏற்படக்கூடும் என கணிக்கின்றன. இதன் காரணமாக இந்த பகுதிகளில் மாலை நேரம் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது.  இதே சமயம் கடற்காற்றின் ஊடுருவல் சரியான திசையில் இருந்து நீடிக்கும் பட்சத்தில் இடிமேகங்கள் வலுப்பெற சாத்தியம் உள்ளது.  இதனால் கரையை ஒட்டிய ஒரு சில பகுதிகளில் கன மழை வாய்ப்பு உள்ளது.