தமிழகத்தில் வலுவான மேலை வன்காற்று (Westerly Gusts) வீசக்கூடும்

கடந்த ஓரிரு வாரமாக தென் இந்தியா தீபகற்பத்தின் மேற்கு கடலோர பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை சற்றே தொய்வு அடைந்த நிலையில் நீடித்து வந்துள்ளது. தற்போது வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஓர் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.  இதன் காரணமாக தென்மேற்கு பருவமழை சற்று பலம் பெறக்கூடிய சூழல் உருவாகி உள்ளது.

கடந்த பல நாட்களாக பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் முடங்கிய நிலையில் பலத்துடன் நீடித்து வரும் மேடன் ஜூலியன் அலைவு (MJO) தென்மேற்கு பருவ மழை தொய்வு அடைய ஓர் முக்கிய காரணமாகும். இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி பருவ மழை  சற்றே பலமடைய வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய நிலையில் இயல்பை விட அதிகமாக பருவ மழை கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் பெய்ய வாய்ப்பு குறைவே, எனினும் பருவமழை இயல்பை ஒட்டி திரும்பி வந்தால் காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் வராது அதிகரித்து மேட்டூர் போன்ற அணைகளில் நீர் அளவு முழு கொள்ளளவை ஒட்டிய நிலையில் தேக்கி வைக்க வழி வகுக்கும்.

மேலும் தமிழகத்தில் பரவலாக மேற்கத்திய வன்காற்று (Westerly Surface Gusts) சற்றே பலமாக வீசக்கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன. இதன் காரணமாக கடலோர தமிழக பகுதிகளில் கடற்காற்று ஊடுருவல் சற்று குறைந்து காணப்படும்.  இதே போல் வளிமண்டலதின் மேல் அடுக்குகளில் மேலைக்காற்று வேகமாக வீசுவதால் இடி மேகங்கள் உருவாகக்கூடிய ஏதுவற்ற நிலை ஏற்பட்டு விடுகிறது.  நாம் பல முறை கூறியது போல் கடற்காற்று ஊடுருவல் காரணமாகவும் வெப்ப சலன மழை ஏற்படுகிறது.  வலுவான மேலைக்காற்று வீசும் பொது இத்தகைய இடிமேகங்கள் ஏற்படாமல் போய் விடும்