உட்புற தமிழக மாவட்டங்களில் மழை வாய்ப்பு

நேற்று இரவு வட தமிழக மாவட்டங்களில் பரவலான மழை பெய்தது.  குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கண மழை பெய்தது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் காலை 5:00 மணி வரை 54 மிமீ மழையும் கடலூரில் 57 மிமீ மழையும் பெய்தது.

Slide2

வங்க கடலில் நிலவி வரும் மேல் அடுக்கு காற்று சுழற்சி காரணமாக தென் இந்திய தீபகற்ப பகுதிகளில் காற்று குவிதல் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாகவும், வெப்பசலனத்தின் உதவியுடன் மேற்கு தமிழக மாவட்டங்களில் இன்று நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு அதிகம்.

Slide1

இதே போன்று மத்திய தமிழக பகுதிகளில் சில பகுதிகளில் இரவு பொழுதில் மழை பெய்யலாம். பெரம்பலூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. கடலோர பகுதிகளில் பாண்டிச்சேரி முதல் வேதாரண்யம் வரையிலான பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டமாக இருக்கும். பகல் நேர வெப்பம் 34° அளவை எட்ட கூடும். மேற்கு மற்றும் தெற்கு புறநகர் பகுதிகளில் மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய கூடும்.