தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நீடிக்க கூடும்

தமிழகத்தில் நேற்று பொதுவாக வறண்ட வானிலை நீடித்தது.  கன்னியாகுமரி மாவட்டம் கீழ கோதையாரில் 26 மிமீ மழையும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 15 மிமீ மழை அளவும் பெய்தது.  இதுவே நேற்று தமிழகத்தில் குறிப்பிடும் படி மழை பெய்த இடங்கள் ஆகும்.

தென் மேற்கு பருவ மழை இந்தியாவின் மத்திய பகுதிகளிலிருந்து மேலும் விலக வாய்ப்பு தற்பொழுது நிலவி வருகிறது.  கடந்த சில தினங்களாக அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென் மேற்கு பருவ மழை விலகாமல் இருந்தது. தற்பொழுது இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து இந்திய வானிலையை பாதிக்கும் நிலையை இழந்து விட்டது.  இதனால் அடுத்த ஓரிரு தினங்களில் தென் மேற்கு பருவ மழை மத்திய இந்திய பகுதிகளிலிருந்து விலக வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Weather_map

வட இந்தியாவில் நிலவி வரும் உயர்ந்த காற்று அழுத்தம் (வளஞ்சுழல்) காரணமாக உலர்ந்த காற்று தென் இந்திய தீபகற்ப பகுதிகளில் நிலவி வருகிறது இதன் காரணமாக காற்றின் திசை வடகிழக்காக இருந்த போதிலும் மழைக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.  இந்த நிலை அடுத்த சில தினங்களுக்கு நீடிக்க கூடும்.  இன்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சற்றே பரவலான மழை வாய்ப்பு உள்ளது, அதே போல் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் மழை வாய்ப்பு குறைந்தே காண படுகிறது. வட கடலோர மாவட்டங்களில் சென்னை முதல் நாகை வரை பகல் நேர வெப்பம் சராசரி அளவை விட சற்றே அதிகமாக இருக்க கூடும்.