கடலோர மாவட்டங்களில் மழை வாய்ப்பு

தற்பொழுது தமிழ்நாட்டின் பலரது எண்ணமும் வடகிழக்கு பருவ மழை எப்பொழுது துவங்கும் என்பதே ஆகும்.  இந்நிலையில் அடுத்த ஓரிரு தினங்களில் தமிழகத்தில் பரவலான மழை தொடங்க வாய்ப்பு உருவாகி வருகிறது.

இந்திய தீபகற்பத்தின் இருபுறமும் நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்த காற்று தாழ்வு நிலை காரணமாக கீழை காற்று வலு பெற்றுள்ளது.  அரபிக்கடல் பகுதியில் உள்ள குறைந்த அழுத்த காற்று தாழ்வு பகுதி வலு பெற்று குறைந்த அழுத்த காற்று தாழ்வு மண்டலமாக மாற கூடும் என எதிர்பார்க்கபடுகிறது.

27_10

வங்க கடலில் இலங்கைக்கு கிழக்கே அமைந்துள்ள குறைந்த அழுத்த காற்று தாழ்வு பகுதி வட மேற்காக நகர்ந்து இந்திய கடலோர பகுதி அருகே நிலை கொள்ள வாய்ப்பு உள்ளது.  இந்த தாழ்வு நிலை மேலும் வலு பெறுமா என்பதில் கேள்வி குறி உள்ள நிலையில் வட கிழக்கு பருவ மழை துவக்கத்தை இந்த கலக்கம் உந்தும் என்பதில் ஐயமில்லை.

இன்று நள்ளிரவு முதல் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மழை தொடங்க வாய்ப்பு உள்ளது.   இன்று குறிப்பாக தென் தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் புதுச்சேரி மற்றும் அதனை சுற்றி உள்ள கடலோர பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.