வங்க கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு

கடந்த சில தினங்களாக தமிழகத்தின் உட்புற பகுதிகளில் பரவலாக பெய்து வந்த மழை கடலோர பகுதிகளில் சற்று குறைந்து இருந்தது.  இந்த நிலை நாளை முதல் மாறி மழை மீண்டும் கடலோர பகுதிகளில் துவங்க கூடும்.

வடகிழக்கு பருவ மழை நேற்று சற்றே ஓய்ந்து காணப்பட்டது.  தமிழகத்தில் சேலம் மாவட்டம் வாழபாடியில் 36 மிமீ மற்றும் திருமயத்தில் 30 மிமீ மழை பதிவாகியது.

தற்பொழுது இலங்கைக்கு கிழக்கே நிலை கொண்டுள்ள மேல் அடுக்கு காற்று அழுத்த சுழற்சி காரணமாக ஓர் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும்.  இதன் காரணமாக இன்று  பின்னிரவு / நாளை அதிகாலை முதல் கடலோர பகுதிகளில் மழை மீண்டும் துவங்க கூடும்.

6_11

நாளை முதல் துவங்கும் மழை தீபாவளியை ஒட்டி உச்சம் பெற கூடும்.  வானிலை படிவங்கள் கடலோர பகுதிகளில் சில இடங்களில் நவம்பர் 12 வரை 30 செ.மீ வரை மழை இருக்க கூடும் என காட்டுகின்றன.  குறிப்பாக டெல்டா மாவட்டம் மற்றும் வட கடலோர பகுதிகளில் மழை வலு பெற கூடும்.

உழவர் எச்சரிக்கை: டெல்டா மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள உழவர் பெருமக்கள் வயலில் நெல் அறுவடைக்கு தயாராக இருப்பின், அடுத்த ஓரிரு நாட்களில் சாகுபடி செய்வது உசிதம்.  ஒரு சில இடங்களில் கண மழை பெய்ய கூடிய வாய்ப்பு இருப்பதால் சாகுபடி நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.