கடந்த ஓர் வாரமாக தென் இந்திய தீபகற்ப பகுதிகளில் நிலவி வந்த மேக மூட்டமான வானிலை காரணமாக வெப்ப நிலை சற்று உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் இந்த வாரத்தின் துவக்கம் முதல் தெளிந்த வானம் நிலவ துவங்கி உள்ளது. அடுத்த ஓர் வாரம் / பத்து நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்க வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக வெப்ப நிலை மீண்டும் சற்று மிதமாக மாற கூடிய வாய்ப்பு உருவாகி உள்ளது. குறிப்பாக மேற்கு கடலோர பகுதிகளில் மீண்டும் வெப்ப நிலை அதிகரித்து 35° வரை அல்லது அதற்கு மேலும் அதிகரிக்க கூடும். இதே போல் தெளிந்த வானிலை காரணமாக தென் இந்தியாவின் அனேக இடங்களில் பகல் நேர வெப்ப நிலை வழக்கத்திற்கு மாறாக ஓரிரு டிகிரி அதிகமாக நிலவ கூடும்.
இரவு நேர வெப்ப நிலை கடந்த வாரத்தை விட உட்புற பகுதிகளில் 2 – 4° வரை குறைந்து குளிரின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும். குறிப்பாக தமிழகத்தின் மேற்கு உட்புற பகுதிகளில் தர்மபுரி / திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் மீண்டும் இரவு நேர வெப்ப நிலை 16 / 17° அளவுகளை தொட கூடும். கடலோர பகுதிகளில் இரவு நேர வெப்ப நிலை 21° அளவில் நீடிக்க கூடும்.