உட்புற தென் இந்தியாவில் வெய்யிலின் தாக்கம் அதிகரிப்பு

நமது வலை பதிப்பில் இரு தினங்களுக்கு முன் கூறியது போல் தென் இந்தியாவின் உட்புற பகுதிகளில் வெய்யிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கி உள்ளது.  இன்று கர்நாடகா மாநிலம் குல்பர்காவில் 41.6 டிகிரி பதிவாகியது, இதே போல் ராயலசீமா மற்றும் தெலுங்கானா பகுதிகளிலும் பல இடங்களில் 40 டிகிரி அளவில் இருந்தது.

19_3_2

மேல் உள்ள வரைபடத்தில் உள்ளது போல் தென் இந்தியா மற்றும் கிழக்கு கடலோர பகுதிகளில் சில இடங்களில் பகல் நேரத்தில் மேற்கில் இருந்து தரை காற்று வீச கூடும்.  இது பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கத்தை அதிகரிக்கும்.  இதன் காரணமாக தெலுங்கானா, ராயலசீமா, உட்புற கர்நாடகா மற்றும் ஓடிஷாவின் சில பகுதிகளில் வெப்பத்தை அதிகரிக்கும்.  இந்த பகுதிகளில் பல இடங்களில் 40 டிகிரி வரை நிலவ கூடிய பகல் நேர வெப்பம் ஒரு சில இடங்களில் அதற்கும் மேலாக இருக்க கூடிய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் உட்புற பகுதிகளில் பகல் நேர வெப்பம் 37 டிகிரி அளவில் இருக்க கூடும். ஓரிரு இடங்களில் 38 / 39 வரை தொடக்கூடும்.  கடலோர பகுதிகளில் சற்று மிதமாக நிலவ கூடிய பகல் நேர வெப்ப நிலை சென்னை போன்ற பகுதிகளில் 34 டிகிரி அளவை ஒட்டி இருக்க கூடும். ஆனால் அடுத்த சில தினங்களில் கடலோர பகுதிகளிலும் வெப்ப நிலை சற்று உயர கூடும்.