தென் தமிழகத்திற்கு வரும் நாட்களில் மழை வாய்ப்பு

தென் இந்தியாவை பொறுத்த வரை அக்டோபர் பிற்பகுதி முதல் ஏப்ரல் மாதம் வரை பொதுவாக காற்றின் திசை கிழக்கில் இருந்து நிலவும்.  ஏப்ரல் பிற பகுதி அல்லது சில ஆண்டுகளில் மே மாத முதல் பகுதியில் காற்றின் திசை தென் மேற்கு பருவ மழைக்கு ஏதுவாக மேற்கு திசைக்கு மாறும். ஏப்ரல் வரை காற்றின் திசை கிழக்கு என்ற போதிலும் வடகிழக்கு பருவ மழை என்பது ஜனவரி மாதம் வரை இருக்கும்.  ஏனைய பிற வானிலை நிகழ்வுகளை கொண்டு பருவ மழை காலம் கணிக்கபடுகிறது.

காற்றின் திசை கிழக்கில் இருக்கும் வரை அவ்வபொழுது கிழக்கத்திய அலை ஏற்படக்கூடும்.  காற்று வெப்ப மண்டல குவியல் பகுதி ஆண்டின் இந்த நேரத்தில் தென் துருவத்தில் இருப்பதால் பொதுவாக இந்த கிழகத்திய அலை பூமத்திய ரேகையை ஒட்டி அல்லது சற்றே மேலாக கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகரும்.

26_3_2

தற்பொழுது உருவாகி உள்ள இந்த கிழக்கத்திய அலை காரணமாக இலங்கை மற்றும் தென் இந்தியாவின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உருவாகி உள்ளது.  அடுத்த வாரம் திங்கள் அல்லது செவ்வாய் முதல் இந்த மழை வாய்ப்பு உருவாகும்.  தற்பொழுது நிலவும் வானிலை படிவங்களின் கணிப்பின் படி இலங்கையில் பரவலாக மழையும் சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதே போல் தென் தமிழகம் மற்றும் கேரளாவில் மழைக்கான வாய்ப்பு நிலவும்.  மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் சில இடங்களில் கன மழை பெய்ய கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.