தமிழகத்தில் மீண்டும் வெப்ப தாக்கம் துவங்க கூடும்

நேற்று தென் தமிழகம் மற்றும் உட்புற தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது.  குறிப்பாக கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் மழை பதிவாகி உள்ளது.   கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை இன்று முதல் படிப்படியாக குறைய துவங்கும்.

இன்று தென் தமிழகத்தில் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய கூடும் ஏனைய பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலையே காணப்படும்.

10_4

சித்திரை மாதம் மிக அருகில் உள்ள நிலையில் தமிழகத்தில் மீண்டும் வெப்ப நிலை அதிகரிக்க கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  தமிழகத்தை பொறுத்த வரை கத்திரி வெய்யில் மற்றும் அக்னி நட்சத்திரம் நிகழும் காலமே அதிக வெப்பநிலை நிலவ கூடிய காலம்.  இந்த கத்திரி காலம் வர ஒரு மாதத்திற்கும் குறைவே உள்ளது.  தற்பொழுது சூரியன் தென் இந்தியாவின் நேர்கோட்டில் இருப்பதால் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க துவங்கி உள்ளது.

நாளை முதல் தென் இந்தியாவில் பரவலாக வெப்ப நிலை உயர துவங்கும்.  வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நாளை 40 டிகிரி வரை எட்ட கூடிய வெப்ப நிலை படிபடியாக அதிகரிக்க கூடும்.  அடுத்த வாரம் முழுவதும் வெப்ப நிலை தமிழகத்தை பொறுத்த வரை பரவலாக 40 டிகிரி அளவை ஒட்டியே இருக்க கூடும்.  உட்புற பகுதிகளில் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது.  கடலோர பகுதிகளில் சற்றே குறைந்து காணப்படும் வெப்ப நிலை 37 / 38 டிகிரி அளவை ஒட்டி நிலவ கூடும்.