காற்றின் திசை மாற்றம் காரணமாக வெப்ப தாக்கம் அதிகரிக்கும்

கடந்த ஒரு மாதமாக தமிழகத்தின் உட்புற பகுதிகளில் வெப்ப நிலை உயர துவங்கி விட்ட போதிலும் கடலோர தமிழகத்தில் பரவலாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படவில்லை. ஒரு சில சமயத்தில் சென்னை மீனம்பாக்கம் வானிலை மையம் 38 டிகிரி அளவை தொட்ட போதிலும் இது ஓரிரு நாட்களுக்கும் மட்டுமே இருந்தது.  ஏனைய கடலோர பகுதிகளில் வெப்ப நிலை 35 / 36 டிகிரி அளவை ஒட்டியே இருந்தது.  கிழக்கில் இருந்து வரும் காற்றே இதற்கு காரணம்.  கடலில் இருந்து வரும் இந்த காற்று வெப்ப நிலை சற்றே மிதமாக இருக்க உதவியது.

21_4_1

அக்டோபர் மாதம் முதல் ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் முதல் பகுதி வரை காற்றின் திசை கிழக்கில் இருந்து நிலவும், இந்த சமயத்தில் தான் வடகிழக்கு பருவ மழை காலம் நிலவுகிறது.  தென் மேற்கு பருவ காலம் துவங்குவதன் அறிகுறியாக காற்றின் திசை மேற்கிற்கு மாற துவங்கும். காற்று மேற்கிலிருந்து வீசும் போது கிழக்கு கடற்கரை பகுதிகளில் நிலக்காற்று காரணமாக வெப்ப நிலை அதிகரிக்க துவங்கும்.  பகல் நேரங்களில் கடல் காற்று வரும் நேரம் மற்றும் வீரியம் பொருத்து வெப்ப நிலை இருக்கும்.  கடல் காற்று தாமதமாக வரும் நாட்களில் வெப்ப நிலை அதிகமாக இருக்க கூடும்.

21_4

இன்று பரவலாக வெப்ப நிலை தமிழகத்தின் உட்புற பகுதிகளில் 39  டிகிரி அளவை ஒட்டி இருக்க கூடும்.  கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களை விட வெப்ப நிலை அதிகரிக்க கூடும்.  சென்னை போன்ற பகுதிகளில் பகல் நேர வெப்ப நிலை அதிகபட்சமாக 37 டிகிரி வரை எட்ட கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  புறநகர் பகுதிகளில் வெப்ப நிலை 40  டிகிரி வரை நிலவ கூடும்.