வட தமிழக பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக மழை வாய்ப்பு

தென் இந்திய தீபகற்ப பகுதியில் தற்பொழுது மேற்கத்திய காற்று நன்கு நிலை கொண்டு விட்டது.  தென்மேற்கு பருவ மழை காலம் துவங்க எதுவாக இந்த பருவ நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.  மேற்கத்திய காற்று காரணமாக இந்த கால கட்டத்தில் கோடை மழை ஏற்பட ஏதுவாகிறது.  இந்திய வானிலை துறை வெப்ப சலனம் காரணமாக மழை வாய்ப்பு என்று அறிவிப்பது பரவலாக இந்த சில மாதங்களிலே ஆகும்.

Weather_Update_2

பகல் பொழுதில் ஏற்படும் வெப்பம் காரணமாக மேல் நோக்கி செல்லும் காற்று இந்த இடி மழை ஏற்பட ஓர் முக்கிய காரணமாகும்.  இதே போல் பின் மாலை பொழுதில் ஏற்படும் கடற் காற்றும் கோடை மழை உருவாக மற்றொரு முக்கிய உந்துதல் ஆகும்.  மேற்கில் இருந்து காற்றும் கிழக்கில் இருந்து வரும் ஈரமான கடல்காற்றும் சந்திக்கும் பொழுது ஏற்படும் நிலையற்ற சூழல் இடி மழை ஏற்பட ஏதுவான நிலையை உருவாக்குகிறது.

Weather_Update

இன்று தமிழகத்தில் பரவலாக வெப்ப நிலை கடந்த சில தினங்களை விட சற்று உயர்ந்தே காணப்படும். குறிப்பாக வட தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் பகல் நேர அதிக பட்ச வெப்ப நிலை 41 டிகிரி வரை எட்ட கூடும்.  தமிழகத்தில் உட்புற பகுதிகளான கரூர், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் 40 டிகிரி வரை இருக்க கூடும்.

Weather_Update_1

இன்று வட தமிழக பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக இடி மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை படிவங்கள் கணிக்கின்றன. வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருவள்ளூர் மற்றும் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த இடி மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  சென்னையின் மேற்கு மற்றும் தெற்கு புறநகர் பகுதிகளில் இந்த இடி மழை மேற்கில் இருந்து வர வாய்ப்பு உள்ளது.  காற்றின் திசையை பொறுத்தே எந்த பகுதிகளில் மழை பெய்ய கூடும் என்பது முடிவாகும், இந்த காற்றின் திசை இடி மழை உருவாகி வலு பெரும் வரை கணிப்பது சற்றே கடினம் ஆகும்.  காற்றின் திசை எதுவாக இருந்தால் சென்னையின் சில பகுதிகளில் மழை பெய்ய கூடும்.