வட தமிழகத்தில் மழை, இன்றும் ஓரிரு இடங்களில் மழை வாய்ப்பு

நேற்று இரவு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நல்ல மழை பெய்தது. வெய்யில் தாக்கம் அதிகம் இல்லை என்ற போதிலும் இந்த கோடை மழை வெப்ப நிலையை நன்கு குறைய செய்தது.  சில இடங்களில் பலத்த காற்றுடன் பெய்த மழை கடற்கரை பகுதியை நெருங்கும் பொழுது சற்று வீரியம் பெற்றது இடி மின்னலுடன் நல்ல மழையாக பெய்ய ஏதுவாகியது.

Weather_Update

திருத்தணியை ஒட்டிய ஆர்.கே. பேட்டை பகுதியில் அதிகபட்சமாக 44 மிமீ மழை பதிவாகியது. செம்பரம்பாக்கம், சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் பகுதிகளில் 3 செ.மீ அளவு மழை பெய்தது. சென்னையின் தெற்கு பகுதிகளில் மழையின் அளவு சற்று அதிகமாக  இருந்தது.

கடலோர ஆந்திர பகுதியில் நிலை கொண்டுள்ள மேல் அடுக்கு காற்று சுழற்சி மற்றும் பகல் நேர வெப்பம் காரணமாக நேற்று இந்த மழை பதிவாகியது நேற்று கேப் எனப்படும் வானிலை நிலையற்ற நிலை வட கடலோர பகுதியில் அதிகமாக இருந்ததால் இடி மேகங்கள் கடற்கரை பகுதியை ஒட்டிய பொழுது சற்றே பலமடைய துவங்கியது.

Weather_Update_1

இன்று மேல் அடுக்க காற்று சுழற்சி காரணமாக ஆந்திராவின் கடலோர பகுதிகளில் சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  இதே போல் கர்நாடகாவின் மேற்கு கரையோர பகுதிகளில் தென்மேற்கு பருவ காற்றின் எழுச்சி காரணமாக சில இடங்களில் கன மழை பெய்ய கூடும்.

வட கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை வாய்ப்பு உள்ள போதிலும் நேற்று போல் காற்றில் சலனம் ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளதால் நேற்று போல் மழை பெய்ய வாய்ப்பு குறைவே.  எனினும் பகல் பொழுதில் வானிலை மேக மூட்டமாக இருக்க கூடும் என்பதால் வெப்ப நிலை குறைந்து காணப்படும் என எதிர்பார்க்கலாம்.