தென்மேற்கு பருவ மழை காலம் துவங்கியது

இந்திய வானிலை துறை நேற்று கேரளாவில் தென்மேற்கு பருவ மழை காலம் துவங்கி உள்ளதாக அறிவித்து உள்ளது.  சராசரியாக ஜூன் முதல் தேதி அளவில் கேரளா கரையை தொடும் தென்மேற்கு பருவ மழை காலம் இந்த ஆண்டு சற்று தாமதமாக அடைந்து உள்ளது.  ஆனால் கடந்த ஆண்டுகளின் மழை பதிவை ஆராய்ந்தோம் எனில் பருவ மழை தாமதமாக துவங்குவதனால் மழை பதிவு குறைவாக இருக்கும் என கூறுவதற்கு இல்லை எனவே இதை பற்றி நாம் அதிகம் கவலை அடைய வேண்டியது இல்லை.

Weather_Update

நேற்றைய நிலவரப்படி கேரளா மற்றும் தமிழகத்தின் அனேக பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை காலம் துவங்கி உள்ளது.  அடுத்த ஓரிரு நாட்களுக்குள் தென் இந்தியாவின் அனேக பகுதிகளிலும் துவங்கி விடும் என எதிர்பார்க்கலாம்.

கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக மழை பதிவாகியது.  குறிப்பாக சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கிட்டத்தட்ட 10 செ.மீ. அளவு மழை பெய்தது. ஜூன் மாதத்தின் சராசரி மழை அளவு 6 செ.மீ. ஆகும்.  மாதத்தின் சராசரி அளவை காட்டிலும் கிட்டதட்ட இரு மடங்கு மழை இந்த மூன்று நாட்களில் பதிவு ஆனது.

Weather_Update_2

மேற்கு கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் தற்பொழுது தரை அளவு தாழி மிகவும் வலுவாக உள்ளதாலும் அரபிக்கடல் பகுதியில் உள்ள மேல் அடுக்கு காற்று சுழற்சி காரணமாகவும் கடலோர கர்நாடகா மற்றும் கோவா கடற்கரை பகுதிகளில் இன்று சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Weather_Update_1

இந்த தரை நிலை தாழி வலுவாக உள்ள பொழுது தென் இந்தியாவின் உட்புற பகுதிகளில் இடி மேகங்கள் உருவாக வாய்ப்பு குறைவே.  இதே போல் தமிழகத்தின் கிழக்கு கடலோர பகுதிகளிலும் மேற்கத்திய காற்றின் தாக்கம் அதிகமாக இருக்க கூடும்.  இந்த சமயங்களில் மழை வாய்ப்பு குறைந்தே காணப்படும்.  இன்று சென்னையில் நேற்று பெய்த மழை காரணமாக வெப்ப நிலை சற்று குறைவாக இருக்க கூடும் நாளை முதல் மீண்டும் வெப்ப நிலை உயர துவங்க கூடும்.