தென்மேற்கு பருவ மழை தொய்வு

இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை சற்று கால தாமதமாகவே இந்திய கரையை அடைந்தது.  ஜூன் 8ஆம் தேதி கேரளாவை வந்தடைந்த தென்மேற்கு பருவ மழை அடுத்த இரு தினங்களில் கர்நாடகாவின் கார்வார் பகுதி வரை அடைந்தது.  இதே போல் வங்காள விரிகுடா பகுதியிலும் சற்று கால தாமதமாக வந்த தென்மேற்கு பருவ மழை ஜூன் 7 முதல் ஜூன் 10 வரை மதிய வங்ககடல் பகுதியை அடைந்தது.  கடந்த இரு தினங்களாக தென் இந்திய தீபகற்பத்தின் இரு பக்கங்களிலும் தென்மேற்கு பருவ மழை தொய்வு அடைந்து மேலும் முன்னேற்றம் ஏதும் ஏற்படாமல் இருக்கிறது.

Weather_Update

காற்றின் வரைபடங்களை நாம் நோக்கினோம் எனில் 700 ஹெக்டர் பாஸ்கல் நிலையில் ( 3 கிமீ உயரம்) கோவா பகுதி வரை காற்றின் திசை தென் மேற்காக வருகிறது. அதற்கு வடக்கில் காற்றின் திசை அரபிய தீபகற்ப பகுதியில் இருந்து உலர்ந்த காற்றாக வருவதால் தென்மேற்கு பருவ மழை மேலும் நகர வழி இல்லாமல் இருக்கிறது.

இதே போல் சற்று கீழ் நிலை காற்றை நாம் ஆராய்ந்தோம் எனில் அதிலும் கொங்கன் கடற்கரை பகுதி வரை பூமத்திய ரேகையை தாண்டி வரும் 850 ஹெக்டர்பாஸ்கல் (1.5 கிமீ உயரம்) ஈரப்பதமான காற்று அடைகிறது.  இந்த நிலை காற்றே மழை மேகங்களை கொண்டு வரும் முக்கிய நிலை ஆகும்.  இதன் காரணமாக தற்பொழுது உள்ள நிலையில் மழை பரவலாக கொங்கன் பகுதி மற்றும் அதற்கு தெற்காக நிலவுகிறது.

Weather_Update_1

அடுத்த சில தினங்களில் இந்த நிலையில் பெரிய மாற்றம் எதுவும் இருப்பதாக வானிலை படிவங்கள் கணிக்கவில்லை.  இந்த நிலையில் மத்திய வங்ககடல் பகுதியில் அடுத்த சில தினங்களில் உருவாக கூடிய சலனம் தென்மேற்கு பருவ மழை மீண்டும் சற்று பலமடைய உதவ கூடும்.