வளிமண்டல சலனம் காரணமாக தமிழகத்தில் மழை வாய்ப்பு

கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் மழை மீண்டும் பெய்ய துவங்கியுள்ளது.  குறிப்பாக வட தமிழக பகுதிகளில் சில இடங்களில் பலத்த மழை பெய்து உள்ளது.  நேற்று விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் சேலம் மாவட்டங்களில் சில இடங்களில் இடி மழை பெய்தது.   இதே போல் தெற்கு ஆந்திராவிலும் கடந்த இரு தினங்களாக நல்ல மழை பெய்து உள்ளது.  தமிழகத்தை ஒட்டிய சித்தூர் மாவட்டத்தில் நேற்றும் பரவலாக மழை பெய்தது.

Weather_Update

இந்நிலையில் தென் இந்திய தீபகற்ப பகுதியில் நிலை கொண்டுள்ள வளிமண்டல சலனம் காரணமாக அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது.  கிழக்கு மேற்காக நிலை கொண்டுள்ள வகைக்கெழு பகுதி (East West Shear Zone) இந்த சலனத்தை உருவாக்கி உள்ளது.  இதன் காரணமாக வங்ககடல் பகுதியில் ஓர் மேல் அடுக்கு காற்று சுழற்சி உருவாகி வருகிறது.  வானிலை படிவங்களின் கணிப்பு படி தமிழகத்தின் தென்கிழக்காக இந்த மேல் அடுக்கு காற்று சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது.  இந்த மேல் அடுக்கு காற்று சுழற்சி தமிழக கடலோர பகுதியை நோக்கி வரும் பொழுது மழை வாய்ப்பு அதிகமாக கூடும்.

Weather_Update_1

தென்மேற்கு பருவ மழை மேற்கு கடலோர பகுதிகளில் தீவிரம் அடைந்து உள்ளது.  கொங்கன் மற்றும் கடலோர கர்நாடகாவின் பல பகுதிகளில் நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை பலத்த மழை பெய்து உள்ளது.  இன்றும் இந்த மழை தொடர வாய்ப்பு உள்ளது.

வட கடலோர தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவில் சில இடங்களில் இன்று நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  சென்னையை பொறுத்த வரை உட்புற பகுதிகளில் இருந்து கரையோரம் இடி மேகங்கள் நகர்ந்து வரும் பொழுது மழை பெய்ய கூடும்.  காற்றின் திசை பொருத்து மழையின் தீவிரம் இருக்க கூடும்.