மேற்கு கடலோர பகுதிகளில் பருவ மழை தீவிரம்

மேற்கு கடலோர பகுதிகளில் பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளது.  குறிப்பாக கர்நாடகா கடலோர மற்றும் அதனை ஒட்டிய உட்புற பகுதிகளில் பல இடங்களில் பலத்த மழை பெய்து உள்ளது.  பருவ மழை துவக்கம் முதல் தென் உட்புற கர்நாடகாவில் சற்று தொய்வு அடைந்தே காணப்பட்டது.  ஆகும்பே போன்ற பகுதிகளில் சராசரி அளவை விட கிட்டத்தட்ட 20 செ.மீ. அளவிற்கு குறைந்து மழை பெய்து உள்ளது. இந்நிலையில் கடந்த ஓரிரு தினங்களாக வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென் இந்தியாவின் தீபகற்ப பகுதிகளில் பருவ மழை வீரியம் அடைந்து உள்ளது.

Weather_Update_௨

 

இன்றும் கர்நாடகா கடலோர பகுதிகளில் பலத்த மழை தொடர கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன. குடகு பகுதிகளில் நல்ல மழை பெய்ய கூடும் என்பது விவசாய பெருமக்களுக்கு ஓர் நல்ல செய்தியாக இருக்க கூடும்.  இதன் காரணமாக காவேரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்க கூடும்.  கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஆர்.ஸ். அணை நீர் அளவு அதிகரிக்க இந்த வரத்து மிகவும் உதவியாக இருக்க கூடும்.

நேற்று சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.  நள்ளிரவு முதல் சாரல் மழை அவ்வப்பொழுது இருப்பதால் வெப்ப நிலை மிகவும் குறைந்து நிலவி வருகிறது.   இந்த சாரல் மழை காலை பொழுதில் 10 மணி வரை இருக்க கூடும் அதன் பின் சற்றே மேக மூட்டமாக வானிலை நிலவ கூடும்.  மாலை வேளையில் வட தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.